நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லியம்மை நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சர்வேராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் அவரின் மகன் வினோத்குமார் வீட்டை பூட்டிவிட்டு தந்தையை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
அதன்பின் ஆறுமுகத்தின் வீட்டின் கதவு முன்பக்கம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் வினோத்குமாரின் மனைவியான ரம்யாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த ரம்யா பீரோவில் இருந்த 120 கிராம் வெள்ளி மற்றும் 14 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக ரம்யா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் பூட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.