தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து அமைச்சர் பெரியகருப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 28 மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளார்கள்.
தமிழக மக்கள் கொடுத்த அந்த மகத்தான வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாமல் அதிமுகவினர் இணைந்து இந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்களது இயக்கம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட உண்மையை மறந்து, தமிழக மக்கள் அவர்களுக்கு கொடுத்த படுதோல்வியை மறைத்து, தமிழக முதல்வர் பெற்ற மகத்தான வெற்றியையும், தேர்தலை நேர்மையாக நடத்திய தேர்தல் ஆணையத்தையும் கொச்சைப்படுத்துகின்ற வகையில் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆட்சியில் தேர்தல் அறிவிப்பு ஆளும் கட்சிக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது என்று உயர்நீதிமன்றம் கண்டனம் செய்து தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளியது அதிமுக அரசு. பின்னர் சரியான நேரத்தில் தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வைத்தது அப்போதைய அரசு. மேலும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு சம்பவத்தை கூட அவர்களால் சுட்டிக்காட்ட முடியவில்லை.
இதிலிருந்து மாநில தேர்தல் ஆணையம் அமைதியாக தேர்தல் நடத்தியுள்ளது என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மாநில தேர்தல் ஆணையத்தை தங்களுடைய கைப்பாவையாக வைத்த நியாபகத்தில் இந்த கற்பனை குற்றச்சாட்டை இருவரும் வைத்திருக்கிறார்கள் .குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் அவர்களுடைய அறிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.