உதவி செய்வது போல் முதியவர்களையும், கிராம மக்களையும் ஏமாற்றிய குற்றத்திற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலனூர் மற்றும் அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கச் செல்லும் கிராம மக்கள் மற்றும் முதியவர்களை கண்காணித்து வந்த சிலர் அவர்களுக்கு பணம் எடுத்துக் கொடுப்பது போல் ஏமாற்றியும், ஏ.டி.எம்., கார்டை மாற்றியும், பணத்தை திருடிச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்துள்ளது. மேலும் இதுபோன்ற மோசடி தொடர்பாக தாராபுரம் காவல்துறையினர் ஏ.டி.எம்.களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
அந்த ஆய்வில் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்களிடமும், கிராம மக்களிடமும் நூதன முறையில் மோசடி செய்து வந்த அந்த நபர் பீகாரை சேர்ந்த சோட்டே லால் பஸ்வான் என்பது தெரியவந்துள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த நபர் முதியவர்களுக்கு பணம் எடுத்து உதவி செய்வது போல் பாவனை செய்து அவர்களது ரகசிய எண்ணை கேட்டு தெரிந்துகொண்டும், கார்டுகளை மாற்றி கொடுத்தும் பணத்தைத் திருடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சோட்டே லால் பஸ்வானை தாராபுரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.