பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு பகுதியில் காளிதாஸ் வசித்து வருகிறார். அதே பகுதியில் அவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டு வாசல் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மர்மநபர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த மர்மநபர் திடீரென உமாமகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து உமாமகேஸ்வரி சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் மர்மநபர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து உமாமகேஸ்வரி பழனி காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.