சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம், ஒய்யப் போறதில்லை என காங்கிரஸ் எம்.பி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்களுக்கும், அந்த இளைஞர்களுடைய குடும்பங்களுக்கும், தமிழ் மண்ணிற்கும் சீமான் அவர்களால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் இங்கே இருக்கிறது. சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் அவர்கள். இளைஞர்கள் என்றாலே அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் தான். அப்படி இருப்பவர்களை இப்படி பயங்கரவாதத்தையும், வன்முறையையும் நோக்கி திசை திருப்புவது அந்த இளைஞர்களுடைய எதிர்காலத்தையும் அழிக்கும். மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தில் பசங்களை படிக்க வைத்து எப்படியாவது அவர்களை வேலைக்கு கொண்டு வரலாமா ? என்று நினைக்கிறார்கள்.
விவசாய கூலி வேலை செய்து, 100 நாள் வேலை செய்து, தொழிற்சாலையில் வேலை செய்து, கஷ்டப்பட்டு ஒரு குழந்தையை அவர்கள் வளர்கிறார்கள். அப்படி கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைக்கப்படுகின்ற இளைஞர்களுடைய வாழ்க்கையை சீமான் நாம் தமிழர் என்கின்ற பெயரில் சீரழித்து கொண்டிருக்கிறார். அந்த இளைஞர்கள் வாழ்க்கையும், அவர்களுடைய குடும்பங்களின் வாழ்க்கையும், தமிழ்நாட்டினுடைய அமைதியையும், பாதுகாப்பையும் முன்னிறுத்தி திரு சீமான் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்குப்பின் காங்கிரஸ் கட்சி இதை இதோடு விட்டுவிடாமல் சட்ட ரீதியாக என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறதோ, அனைத்து வாய்ப்புகளையும் கடைபிடித்து இந்த பிரச்சனையை ஒரு லாஜிக்கல் முடிவுக்கு நாங்கள் கொண்டு செல்லப்போகிறோம். சீமானை பொருத்தவரை அவர் தமிழகத்தில் ஒரு அழிவு சக்தி, ஒரு பயங்கரவாத சக்தி சீமானின் கையில் இருக்கின்ற இளைஞர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, இந்த தேசத்திற்கும் அழிவை ஏற்படுத்தக்கூடியவர்களாக சீமான் அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
அந்த நாம் தமிழர் கட்சியில் இருக்கின்ற இளைஞர்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் அவர்களுடைய பாதுகாப்பிற்கும், அவர்களுடைய குடும்பங்களின் பாதுகாப்பிற்கும் சேர்த்துதான் நாங்கள் பேசுகிறோம். அதனால் காங்கிரஸ் கட்சி இது போன்ற விஷயங்களை பார்த்துக்கொண்டு மௌன சாட்சியாக இருக்காது மிக நிச்சயமாக சீமான் அவர்கள் மீது சீமான் போன்ற ஒரு அழிவு சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என தெரிவித்தார்.