தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய இரண்டு தினங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது. எனவே அதிமுகவினர் திமுகவின் வெற்றி குறித்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் “மக்கள் பணியில் நமது மனசாட்சியே நமக்கு எதிர்க்கட்சி “தோழமை கட்சிகளின் கோரிக்கைகள் ,ஊடகங்களில் விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் சாதாரண மனிதர்களின் தெளிவான பார்வை, பதிவுகள் ஆகியவையும் எதிர்க்கட்சியின் பணியே. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு மக்கள் பணியை நமது அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் எதிர்க்கட்சி இல்லாத ஆளும் கட்சி என்று இறுமாப்புக் கொள்ளும் மனப்பான்மை எனக்கு கிடையாது. எதிர்க்கட்சிக்குரிய குறைந்தபட்ச அளவிலான வெற்றியைக் கூட அதிமுகவுக்கு தர மக்கள் முன் வரவில்லை என்று கூறியுள்ளார்.