தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி, கமலுக்கு கொடுக்கும் மடியில் விஜய் உள்ளிட்ட எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறிய சீமான் தற்போது விஜய் குறித்து இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விஜய் ரசிகர்கள், சீமான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், கொள்கை இல்லாத சீமானே எங்கள் தளபதியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. உங்களுக்கு மட்டுமே அடிக்க வெட்ட தெரியும் என்று நினைத்துவிடாதீர்கள். சத்தமே இல்லாமல் சுத்தமாக செய்வோம். ஜில் ஜங் ஜக் சீமானே உடனடியாக மன்னிப்பு கேள் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.