தேனியில் தன்னிடம் மாயக்கண்ணாடி இருப்பதாகவும், அவற்றை கண்களில் அணிந்தால் எதிரில் இருப்பவர்கள் நிர்வாணமாக தெரிவார்கள் என்று கூறி கும்பகோணம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு விலைப் பேசியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பார்ப்பவர்களை நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி என்று கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பி சென்ற இன்னொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், தேனி வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை, கிராமத்தை சேர்ந்தவர்கள் அரசு முத்து, திவாகர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து தங்களிடம் மாயக்கண்ணாடி இருப்பதாகவும், அதனை கண்ணில் அணிந்து கொண்டால் எதிரில் இருப்பவர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என்றும், கூறி கும்பகோணம் பகுதியை சேர்ந்த யுவராஜிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு விலை பேசியுள்ளனர்.
அதை நம்பிய யுவராஜ் தன்னுடைய நண்பரான சீனிவாசன், மதன், வரத ராஜன், ஆகியோரிடம் இந்த விபரங்களைக் கூறி, மாயை கண்ணாடியை வாங்கும் ஆர்வத்துடன் 4 பேரும் காரில் ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு தேடி வந்துள்ளனர். அவர்களை தொடர்பு கொண்ட அரசமுத்து, திவாகர் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு அருகே வரும்படி கூறியுள்ளனர். அங்கு வந்த யுவராஜிடம் 1 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு அரசமுத்து, திவாகர் கண்ணாடி ஒன்றை கொடுத்து விட்டு வேகமாக சென்றுவிட்டனர்.
ஆனால் அந்தக் கண்ணாடி முதியவர்கள் அணியும் சாதாரண வகை கண்ணாடி என்பதை அறிந்த யுவராஜ், தன்னுடைய நண்பர்களுடன் அரசமுத்து, திவாகர் ஆகியோரை பிடிப்பதற்கு விரட்டியுள்ளனர். ஆனால் பணத்துடன் தப்பித்து தலைமறைவாகிவிட்டார் அரசமுத்து என்பவர். திவாகர் மட்டும் பிடிபட்டுள்ளார். யுவராஜ் அவரை குறித்து புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.