விண்வெளி சுற்றுலாவை நிறுத்தி விட்டு பூமியை காப்பாற்றும் பணியில் ஈடுபாடுமாறு பிரித்தானிய இளவரசர் அறிவுறுத்தியுள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ‘புளூ ஆரிஜின்’ என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் புளு ஆரிஜின் நிறுவனத்தின் சார்பில், ‘நியூ ஷெப்பர்ட்’ என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலத்தில் ஜெப் பெசோஸ் அடங்கிய குழுவினர் வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து, எலான் மஸ்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் கடந்த மாதம் 4 நபர்களை வெற்றிகரமாக விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று திரும்பியது. இந்த நிகழ்வுகள் குறித்து பிரித்தானியா நாட்டின் இளவரசர் வில்லியம் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “விண்வெளி சுற்றுலாக்களில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு பூமியைக் காப்பாற்றும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திறன் கொண்டவர்கள், மனித வாழ்வுக்கு வேறு கிரகங்களை தேடுவதை நிறுத்துங்கள். நமது பூமியை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.