சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று தொண்டர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான உண்மையான பாசம் வைத்து இருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்முடைய ஒரே நோக்கம் புரட்சித்தலைவி அம்மா சொல்லிச் சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறு யாரை பற்றியும் கவலை படக்கூடாது. எம்ஜிஆர் மீது பாசம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே கட்சியை விட்டு போக மாட்டார்கள்.
தொண்டர்களின் மனக்குமுறலை பார்த்தேன். இனியும் என்னால் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. புரட்சித்தலைவர் மறைவிற்கு பிறகு அம்மா ஜெயலலிதாவுடன் இருந்து இந்த கட்சியை பழைய நிலைமைக்குக் கொண்டு வந்தோம். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு என்ன நடந்ததோ அதே தான் இப்பொழுதும் நடந்து வருகிறது. எனவே நான் கட்சிக்கு வந்து கட்சியை நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் வரும் 16ஆம் தேதி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் சசிகலா அஞ்சலி செலுத்தவுள்ளார். இதற்காக அவரது தரப்பில் காவல்துறையிடம் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி. அவரால் அதிமுகவில் எந்த விதமான பிளவையும் ஏற்படுத்த முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைதான் அம்மா என்று மக்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் நானும் அம்மா தான் என்று சசிகலா சொல்லி வந்தால், அதை மற்றவர்கள் பார்த்து கேலியாக சிரிக்கின்ற நிலைமை தான் ஏற்படும். அம்மா அம்மா தான். மத்ததெல்லாம் சும்மாதான்” என்று விமர்சித்துள்ளார்.