இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் வீடுகளின் முன்பு வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் மதியம் தொடர்ந்து 2 மணி நேரம் விடாமல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பொதுமக்கள் ஆயுத பூஜை என்பதால் மார்க்கெட் பகுதிக்கு பூஜை பொருட்கள் வாங்க வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் மழை காரணமாக ரோடுகளில் தண்ணீர் அதிகளவில் சென்றதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். இதனையடுத்து கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் நகர் பகுதியில் சுமார் 50 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுவதாவது, செங்கோட்டையன் நகர் பகுதியில் பல வருடமாக சாக்கடை வசதி இல்லாததால் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் வீடுகள் முன்பு தேங்கியுள்ளது.
இதனால் இரவு நேரங்களில் விஷ ஜந்துகள் வரும் அபாயம் உள்ளது. மேலும் வீடுகளின் முன்பு தேங்கியுள்ள மழைநீரில் கழிவு நீரும் கலந்து உள்ளதால் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனையடுத்து குடிநீர் குழாயை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது வெள்ளம் வீடுகளை சூழ்ந்து கொள்கிறது. இதனால் மழைநீர் தேங்காமல் இருக்க சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதைப் போன்று கவுந்தபாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 4 மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் 80 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக வயல்வெளி மற்றும் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக ஆயுத பூஜையின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.