நிலக்கரி அமைச்சகத்தின் எச்சரிக்கையை மாநில அரசுகள் கேட்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவில் தற்போது டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிலக்கரி தட்டுப்பாட்டை மறுத்துவரும் மத்திய அரசு, மாநில அரசுதான் நிலக்கரி அமைச்சகத்தின் பேச்சைக் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றது. இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்ரா மாவட்டத்தில் உள்ள அசோகா நிலக்கரி சுரங்க பணிகளை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் அனைத்து மாநிலங்களுக்கும் நிலக்கரி வினியோகம் சீராக நடைபெற்று வருகின்றது என்றும், மழை போன்ற சில காரணங்களால் சுரங்கங்கள் மூடப்பட்டாலும் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் அனல் மின் நிலையங்களுக்கு அன்றாட நிலக்கரி தேவை 1.87 பில்லியன் டன்னாக இருக்கும் போது கடந்த இரண்டு நாட்களாக மட்டும் இரண்டு பில்லியன் டன் நிலக்கரி வினியோகம் செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது மேலும் 10 சதவீத நிலக்கரியை சேர்த்து அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பி வருவதாக அவர் தெரிவித்தார்.