முன்னாள் அதிபர் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனுக்கு தீடிரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கலிபோர்னியாவில் உள்ள இர்வின் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 72 வயதான கிளிண்டனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளனர். இருப்பினும் அவருக்கு எந்தவொரு சுவாசக் கருவியும் பொருத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் பில் கிளிண்டன் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அல்பேஷ் அமின் மற்றும் லிசா பார்டாக் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். அதில் “அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதற்காகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு நாங்கள் அளித்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று நாங்கள் நம்புகிறோம்” எனக் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து பில் கிளிண்டன் செய்தி தொடர்பாளரான ஏஞ்சல் யூரேனா ட்விட்டரில் பதிவிட்டதில் “பில் கிளிண்டன் நல்ல மனநிலையில் சீராக உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறந்த கவனிப்பை வழங்கியுள்ளனர். அதற்காக அவர்களுக்கு குணமடைந்து நன்றி தெரிவிக்க உள்ளார்” என்று வெளியிடப்பட்டுள்ளது.