பல்வேறு தடைகளுக்கு பிறகு சசிகலா இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொண்டர்களுடன் புடைசூழ வந்த சசிகலா ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்தி தன்னுடைய அஞ்சலியை செலுத்தினார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அதிமுக கொடியை ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் சமாதி, அண்ணா சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான் தாமதமாக வந்தது ஏன் என்று உங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். அம்மாவுடன் நான் இருந்த 5 ஆண்டுகால இடைவெளியில் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை இப்போது இறக்கி வைத்து விட்டேன். தொண்டர்களுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்தார்கள். நிச்சயம் தொண்டர்களையும், கழகத்தையும் அம்மாவும், எம்ஜிஆரும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.