விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட காதல் ஜோடி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு அங்கு இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுமிக்கும், சதீஷ்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமான இந்த சிறுமியை உறவினர்கள் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சதீஷ்குமார் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்துள்ளது.
அதன் பின் தனியாக தங்கியிருந்த சிறுமியையும், சதீஷ்குமாரையும் காவல்துறையினர் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு காவல்நிலையத்தில் சுத்தப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் காதல் ஜோடி நைசாக வெளியேறி தப்பித்துச் சென்றனர். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த சதீஷ்குமார் மற்றும் அந்த சிறுமியை காவல்துறையினர் பிடித்து விட்டனர். அதன்பின் போக்சோசட்டத்தின் கீழ் சதீஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அந்த சிறுமியை கோவையில் இருக்கும் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.