மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டச்சியூர் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயிகளிடம் இருந்து பால் வாங்கி அதை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனை செய்து வருகின்றார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பத் இரண்டாவது திருமணம் செய்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு லட்சுமி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன்பின் சம்பத்திடம் லட்சுமியின் தாயார் அவரை வந்து அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். பின்னர் சம்பத் லட்சுமியை வந்து அழைத்து சென்று வீட்டில் விட்டு விட்டு வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் லட்சுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது இரண்டு மகள்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே லட்சுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.