தடுப்பு அணை நிரம்பி வழிவதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகாமையில் இருக்கும் ஆந்திரா மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, பேத்தமங்கலம் ஏரி நிரம்பி அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் ஆந்திரா எல்லைப் பகுதிகளான பெரும்பள்ளம் மற்றும் இரட்டை பாலாறு ஆகிய இடங்களில் கட்டப்பட்டிருக்கும் தடைகளை தாண்டி தமிழக எல்லையில் இருக்கும் புல்லூர் வழியாக பாலாற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் வர தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் இருக்கும் புல்லூர் தடுப்பணை நிரம்பியதால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் அதிக அளவில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதன் காரணத்தினால் பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து அணை நிரம்பி வழிவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கிடா வெட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.
பின்னர் ஆந்திர தடுப்பணை பகுதி மற்றும் தமிழக எல்லையில் இருக்கும் கனக நாச்சியம்மன் கோவில் பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் ஆந்திரா அரசு தடை விதித்திருக்கிறது. இதனைப் போல் பாலாற்றுப் படுகைகளில் இருக்கும் அம்மனூர் உள்பட 3 பகுதிகளில் ஆற்றின் அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பாக தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தடுப்பணைகளை கட்டித் தண்ணீரை சேகரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.