கடலூரில் வீடு மனை அங்கீகாரம் வழங்குவதற்காக ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அதிகாரியாக சக்கரவர்த்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் வடலூர் மட்டுமல்லாமல் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தை யும் சேர்த்து பொறுப்பேற்று பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குறிஞ்சிபாடி தானுர் கிராமத்தில் வசித்து வரும் மோகன் தாஸ் என்பவர் 25 சென்ட் நிலம் வாங்கி அதில் மனை கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக சக்கரவர்த்தியிடம் மனைக்கு அங்கீகாரம் வழங்க கோரி மனு அளித்திருந்தார்.
இதையடுத்து மனைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டுமேயானால் ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என சக்கரவர்த்தி கூறியுள்ளார். இதையடுத்து அவ்வளவு பெரிய தொகை என்னிடம் இல்லை சற்று குறைத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுக்க 25 ஆயிரம் தந்தால் அங்கீகாரம் தருகிறேன் என்று கூறினார். இதையடுத்து வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருகிறேன் என்று கூறிக் கொண்டு போன மோகன்தாஸ் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.
அதன்பின் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆலோசனையின் பெயரில் அவர் கொண்டு சென்ற ரூபாய் 25 ஆயிரத்தில் ரசாயன திரவியம் தடவப்பட்டு சக்கரவர்த்தி கையில் கொடுக்கப்பட்டது. இதனை கண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென அலுவலகத்திற்குள் சென்று பேரூராட்சி தலைமை அலுவலரான சக்கரவர்த்தியை கையும் களவுமாக பிடித்தனர். அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவர்கள் அலுவலகத்திற்கே வரவழைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட பின் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.