திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் சாலையோர தடுப்பு சுவரை இடித்து கொண்டு பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை அடுத்த விட்டல் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் அதே பகுதியில் உள்ள நூல் மில்லில் ஜீப் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். நாள்தோறும் மில்லில் பணிபுரிந்து வரும் வேலையாட்களை அவரவர் கிராமத்தில் கொண்டுபோய் இறக்கி விடுவதே இவரது வேலை. அந்த வகையில் நேற்றைய முன்தினம் இரவே சக பணியாளர்களை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு அவரவர் கிராமத்தில் இறக்கி விட்டு மீண்டும் திரும்பி வந்துள்ளார்.
வரும் வழியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை தடுப்பின் மீது மோதி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். பின் இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கயிறு கட்டி இழுத்து அப்புறம் படுத்தியதோடு மட்டுமல்லாமல் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.