மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெள்ளி முதல் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை பக்தர்களுக்கு அளிக்க உள்ளதாக அதிமுக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில் என்றால் அது மதுரை மீனாட்சியம்மன் கோயில் தான். இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மக்களைக் காட்டிலும் அதிகமாக வெளியூர் மக்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நிகராக பக்தர்கள் அதிகமாக வந்து செல்வதால் அங்கு வரும் பக்தர்களுக்கு நாள்தொறும் பிரசாதமாக லட்டு உள்ளிட்டவற்றை வழங்க உள்ளதாக அதிமுக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதையடுத்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 30 கிராம் எடை கொண்ட லட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த புதிய நடைமுறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சிகள் மூலம் தொடங்கி வைப்பார் என்றும் கூறினார். தீபாவளி முதலே லட்டு வழங்க திட்டமிடப்பட்டதாகவும் அது சற்று தாமதமாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.