சுவிட்சர்லாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் சுமார் 19 ஆயிரத்து 650 பெண்களும், 23 ஆயிரத்து 100 ஆண்களும் 2013-2017-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆண்டொன்றிற்கு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் புற்றுநோய் அறிக்கை வெளியிட்டது. மேலும் இந்த எண்ணிக்கை முந்தைய ஐந்து ஆண்டு காலகட்டங்களை விட 3,350 அதிகம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் இந்த வருடம் 22,000 பெண்களுக்கும், 26 ஆயிரம் ஆண்களுக்கும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக புற்று நோயால் முதியோர்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் சுவிஸ் நாட்டில் 7,650 பெண்களும், 9,400 ஆண்களும் 2013-2017-ஆம் ஆண்டுக்கு இடையில் புற்று நோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது 23 சதவீதம் பெண்களும், 30 சதவிகிதம் ஆண்களும் சுவிட்சர்லாந்தில் புற்றுநோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல் 1988-க்கும் 2017-க்கும் இடையிலான காலகட்டத்தில் பெண்கள் 28 சதவீதமும், ஆண்கள் 39 சதவீதமும் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில் 2003-2017-ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் ஆண்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், பெண்களில் புற்றுநோய் பாதிப்பு சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் கடந்த இருபது வருடங்களில் இளம்பெண்கள் மற்றும் பெண்களில் 1.8 சதவிகிதமும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் 0.8 சதவிகிதமும் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.