மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுந்தரநடப்பு பகுதியில் கூலித் தொழிலாளியான சிதம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சிதம்பரம் தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இலை பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார். இதனை அடுத்து தன் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் இலைகளை பறிக்க முயற்சி செய்தபோது அவர் கை மீது மேலே சென்ற மின்சார வயர் உரசி விட்டது.
இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சிதம்பரம் மரத்தில் தொங்கியவாறு உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிதம்பரத்தின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.