தமிழக பாஜக நிர்வாகியான கல்யாணராமன் சித்தாந்த கருத்துகளை பேசி பலமுறை சர்ச்சைகளில் சிக்கக் கூடியவர். திமுக தலைவர்கள் பற்றி கடுமையாக விமர்சித்தும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறார். சிலமுறை அவரது வரம்பு மீறிய செயல்பாடுகளுக்கும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரைப் பற்றி இணையதளத்தில் அவதூறாக கருத்து பரப்பியதையடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் போதிய ஆதாரங்களை சேகரித்து 10 மணி நேரத்தில் கல்யாணராமனை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அவரை தற்போது ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் குறித்து அவதூறு பரப்பி வரும் கல்யாண ராமனுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து தர்மபுரி மக்களவை எம் பி செந்தில்குமார் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி இது. பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவருடைய டுவிட்டர் கணக்கும் முடக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்