காஞ்சிபுரத்தில் தான் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை நண்பன் எடுத்து குடித்ததால் ஆத்திரம் தாங்காமல் நண்பனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த நந்திவரம் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் அதே நந்திவரம் பகுதி எழில் அவன்யூ தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் நீண்ட கால நட்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சீனிவாசன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து மது அருந்துவதை சூர்யா வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் நேற்றைய தினம் இரவு சீனிவாசனும் அவரது நண்பன் சூர்யாவும் வீட்டு வராண்டாவில் மது அருந்த உட்கார்ந்து உள்ளனர். பின் தான் குடிப்பதற்கு ஒரு டம்ளரில் மதுவையும் நண்பன் குடிப்பதற்கு மற்றொரு டம்ளரில் மதுவையும் ஊற்றி விட்டு சீனிவாசன் வெளியே சென்று விட்டார்.
பின் திரும்பி வந்து பார்க்கையில் நண்பன் சூர்யா அவனது மதுவை குடித்தது மட்டுமல்லாமல், சீனிவாசன் அவருக்கு ஊற்றி வைத்திருந்த மதுவையும் சேர்த்து குடித்தால் ஆத்திரமடைந்த சீனிவாசன் சூர்யாவின் கழுத்தை வீட்டில் இருந்த கத்தியால் அறுத்து கொலை செய்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் முன்பே அவர் உயிரிழந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சீனிவாசனை கைது செய்து மது குடித்ததற்காக தான் நண்பனை கொலை செய்தாரா அல்லது வேறு காரணத்திற்காகவா என்ற கோணங்களில் சீனிவாசனிடம் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.