விண்வெளியில் வைத்து படம் எடுப்பதற்காக சென்ற ரஷ்ய படக்குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்பினர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக மூத்த வீரரான ஆண்டன் ஷ்காப்லெரோவ் தலைமையில் ரஷிய நடிகையான யூலியா பெரிசில்ட் மற்றும் திரைப்பட இயக்குனரான ஷிபென்கோ போன்றோர் கொண்ட படக்குழுவினர் விண்வெளிக்கு சென்றனர். இந்தப் படத்திற்கு “தி சேலன்ஞ்” என பெயரிடப்பட்டது.
அதாவது உடல்நலக் குறைபாடு ஏற்படும் விண்வெளி வீரரை காப்பாற்றுவதற்காக அதன் நிலையத்திற்கு செல்லும் பெண் மருத்துவரின் கதை என படக்குழு அறிவித்திருந்தது. கடந்த 5-ம் தேதி சோயுஸ் எம்எஸ்-19 என்ற விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற படக்குழுவினர் 12 நாட்கள் அங்கு தங்கி படப்பிடிப்பை மேற்கொண்டனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து அவர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கஜகஸ்தான் நேரப்படி 12 மணி 35 நிமிடத்தில் அவர்கள் தரை இறங்கி உள்ளனர். ஆனால் விண்வெளி வீரர் ஆண்டன் ஷகாப்லெரோவ் அடுத்த வருடம் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.