திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி தொடங்கியுள்ளது. அங்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதற்கு தேவையான உரங்களைத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் பெற்று சாகுபடி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் கடைகளில் யூரியா உள்ளிட்ட உரங்கள் வாங்க செல்லும் விவசாயிகளிடம் பிற நுண்ணூட்ட உரங்கள் வாங்கினால்தான் யூரியா வழங்கப்படும் என்று உர கடைக்காரர்கள் வலுக்கட்டாயமாக உரங்களை விற்பதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து யூரியா வாங்க வரும் விவசாயிகளிடம் நுண்ணூட்ட உரங்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் கடைகளில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் எச்சரித்துள்ளார். ஏற்கனவே 10 கடைகளுக்கு உரம் விற்பனை செய்ய ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.