பஞ்சாப் மாநிலத்தில் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கட்சியானது மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தலைமையில் இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக எதிர்க்கட்சியான பாஜக செயலாற்றி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதில், “பஞ்சாப் மாநிலத்தில் உயிர்த்தெழுவதற்கான கடைசி வாய்ப்பானது தற்பொழுது கிடைக்கப் பெற்று உள்ளது. பஞ்சாப் மாநிலமானது ஒரு காலத்தில் மிகவும் பணக்கார மாநிலமாக திகழ்ந்தது. ஆனால் தற்பொழுது மிகவும் கடன் சுமை கொண்டதாக மாறி உள்ளது. தற்சமயம் லட்சக்கணக்கில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இருப்பினும் இவற்றை நிரப்புவதற்கு தேவையான நிதி நிலையானது இங்கு இல்லை. குருகிராந்த் சாகிப் கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளுக்கு மற்றும் பெபல் கலன் மற்றும் கோட்காபூர் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கபட்டால் மட்டுமே பஞ்சாபின் ஆன்மாவிற்கு நீதி கிடைக்கும்.
மேலும் மதத்தை அவமதித்த விவகாரம் போதைப்பொருள் விவகாரம், வேளாண் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு, மணல் கொள்ளை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள், மின்சாரம், போக்குவரத்து நெருக்கடி, குறைந்த விலையில் மின்சாரம் போன்றவை குறித்து கூடிய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரங்கள் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் சரண்சிங் சன்னிக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும். மேலும் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இடம்பெற உள்ள 13 அம்ச கோரிக்கைகளை குறித்து நேரில் ஆலோசனை மேற்கொள்வதற்காக நேரம் ஒதுக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
— Navjot Singh Sidhu (@sherryontopp) October 17, 2021