டி20 உலகக்கோப்பை குரூப் சுற்று முதல் ஆட்டத்தில் ஓமன் அணி பப்புவா நியூ கினியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கி உள்ளன. இந்த சுற்றில் குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.. இன்று முதல் நாள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.. முதல் ஆட்டத்தில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஓமன் – பப்புவா நியூ கினியா அணிகள் 3: 30 மணிக்கு மோதியது.. இதில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பப்புவா நியூ கினியா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.. தொடக்க பேட்டர்களாக களமிறங்கிய டோனி உரா, லீகா சியாகா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாக வெளியேறினர். அதன் பிறகு களமிறங்கிய கேப்டன் ஆசாத் வாலா சிறப்பாக ஆடினார்.. அதிரடியாக ஆடிய ஆசாத் 4 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 56 (43) ரன்களும், சார்லஸ் அமினி 4 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 37 (26) ரன்களும் எடுத்தனர்.. சேஸ் பாவ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்..
மற்ற வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை.. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.. இறுதியில் 9 விக்கெட் இழந்து பப்புவா நியூ கினியா அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.. ஓமன் அணி தரப்பில் அதிகபட்சமாக சீஷன் மக்சூத் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.. தொடக்க வீரர்களாக அகிப் இல்யாஸ், ஜதிந்தர் சிங் ஆகியோர் பப்புவா நியூ கினியா பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர்.. தொடக்கமே இருவரும் அதிரடியாக ஆடி எதிரணியை கலங்கடித்தனர்..
இருவரும் விக்கெட்டை இழக்காமல் ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.. ஓமன் அணி கடைசியாக 13.5 ஓவரில் விக்கெட் பறிகொடுக்காமல் 131 ரன்கள் எடுத்து எளிதில் வென்றது..
ஜதிந்தர் சிங் 42 பந்துகளில் (7 பவுண்டரி 4 சிக்சர்கள்) 73 ரன்களும், அகிப் இல்யாஸ் 43 பந்துகளில் (5 பவுண்டரி 1 சிக்சர்) 50 ரன்களும் அடித்தனர்.. இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஓமன்..
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.. இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்து இருக்கும் அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் இடம் பிடித்துள்ள நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.. ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா அணிகளும் இடம் பிடித்துள்ளன.. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.. மோதிய பின் இரண்டு பிரிவிலும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.