தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் அறிவுறுத்தியுள்ளனர்.மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள பள்ளிகளுக்கு கூடுதல் பணியிடம் ஏற்படுத்தி தரலாம். பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் இருக்கிறது. தற்போது அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி திறக்கப்படும் என்ற அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள பள்ளிகளுக்கு கூடுதல் பணியிடம் ஏற்படுத்தித்தர வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொது மாறுதல் கலந்தாய்வை ஆசிரியர்களுக்கு நடத்தவும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆசிரியர்களுக்கு பூஜ்ய இடமாறுதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல்ஒரே பள்ளியில் 10 ஆண்டு அல்லது 20 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக சில கொள்கைகள் வகுக்கப்பட்டு கலந்தாய்வின் போது தெரிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு ஆசிரியர் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே கடந்த காலங்களில் நடைமுறையிலுள்ள ஒளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த முதல்வர் ஆணையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.