உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள மிர்சா இனாயத்துல்லாபூர் என்ற கிராமத்தை சேர்ந்த நவீன் குமார் என்பவரின் மூன்று மகள்களான பரி(8), விதி(7) மற்றும் பிஹு(5) ஆகியோர் ஒரு கடைக்குச் சென்று அரிசி மற்றும் நம்கீன் எனப்படும் ஒரு திண்பண்டத்தை வாங்கி சாப்பிட்டு உள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மூன்று சிறுமிகளும் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். இதைக்கண்டு அஞ்சிய குடும்பத்தினர் அவர்களை அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மூன்று சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அதில் ஒருவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து மீதமுள்ள 2 சிறுமிகளையும் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு சிறுமிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இரண்டு சிறுமிகளும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த துணை பிரிவு மாஜிஸ்திரேட் அந்த கிராமத்திற்கு சென்று சிறுமிகள் உட்கொண்ட உணவுகளின் மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் சிறுமிகள் தின்பண்டங்களை வாங்கிய கடைக்காரர் மற்றும் அவர்களின் இரண்டு மகன்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.