தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அமல் படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இலவச நோட்டு, புத்தகம், மிதிவண்டி மற்றும் மடிக்கணினி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. 2011 ஆம் ஆண்டு கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கியது.
அதன்பிறகு பள்ளிகளில் படிக்கும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றப்பட்டாலும் இத்தகைய திட்டம் நடை முறையிலேயே இருந்து வருகிறது. கடந்த 2 ஆண்டு காலமாக மட்டும் கொரோனா காரணமாக பள்ளிகள் எதுவும் செயல்படவில்லை. அதனால் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க முடியவில்லை.
தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் இலவச மடிக்கணினிகள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. 2018 மட்டும் 2019 ம் கல்வியாண்டுகளில் ஒரு சில மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் சுமார் 5 லட்சம் மடிக்கணினிகள் தேவைப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத மாணவர்களுக்கு தற்போது 1.75 லட்சம் மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதுவரை மடிக்கணினி வழங்கப்படாத மாணவர்களுக்கும் சேர்த்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.