திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அரசு பள்ளியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை அடுத்த நம்பியம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் தலைமையாசிரியர் செல்வமணி உத்தரவின் பெயரில் வெட்டி சாய்க்கப்பட்டன. இதையடுத்து தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் விஏஓ தங்கராஜ் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். பின் தலைமையாசிரியரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது, பள்ளி கட்டிடங்களை மரக்கிளைகள் சேதப்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே மரங்கள் வெட்டப்பட்டதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்திருக்கிறார்.