ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சின்னக் கோவிலாங்குளம் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த இளங்கோவன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத காரணத்தினால் குடும்பத்தினர்கள் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர்.
அப்போது ஆலங்குளம் அருகாமையில் இருக்கும் ஊத்துமலை அடுத்ததாக அமைந்திருக்கும் பலபத்திரராமபுரம் குளத்தின் கரையோரத்தில் இளங்கோவன் தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற நபர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருகிலிருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இதில் இளங்கோவன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
பின்னர் தடயங்களை தடவியல் நிபுணர்கள் சேகரித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்ட நிலையில் யாரையும் கவ்வி பிடிக்காமல் சிறிது தூரம் ஓடி நின்றுள்ளது. இதனை தொடர்ந்து இளங்கோவனின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளங்கோவனை கொலை செய்த குற்றவாளிகள் யார், எந்த காரணத்திற்காக கொலை செய்தனர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.