Categories
தேசிய செய்திகள்

கேரளாவை புரட்டி எடுத்த கனமழை… தொடர்ந்து அதிகரிக்கும் பலியானோரின் எண்ணிக்கை…!!!

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழையின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 35 பேர் உயிரிழந்ததாகவும், பலர் மண்ணில் புதைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றிலிருந்து பலர் தப்பினாலும் வீடு, கார் உள்ளிட்ட உடமைகளை மக்கள் பலரும் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் முண்டகாயம் பகுதியில் பெய்த கன மழையில் 2 மாடி வீடு குடியிருப்பவர்கள் கண்முன்னே ஆற்றோடு அடித்துச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மேலும் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கேரளாவின் முக்கிய அணையான இடுக்கி அணையின் நீர்மட்டம் அபாய அளவை தொடுவதால் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் துலாம் மாத பூஜைக்கு திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 21ஆம் தேதி நடை சாத்தப்படுகிறது.

Categories

Tech |