தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் சில மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு 200 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைப்பதற்கு மக்கள் பள்ளி என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக அன்றாடம் ஒன்றரை மணி நேரம் மாணவர்களின் வீடு தேடிச் சென்று பாடம் கற்றுக் கொடுக்கப்படும்.
இந்நிலையில் மக்கள் பள்ளி திட்டம் தொடர்பாக சென்னையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தஞ்சை, திருச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தொடர்ந்து ஆறு மாத காலத்திற்கு இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் மூலம் கற்றல் இடைவெளியை குறைக்க இயலும். மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 1-8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களை மையங்களுக்கு அனுப்ப வேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விதத்தில் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.