Categories
தேசிய செய்திகள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி… ‘அறிவியல் பூர்வமான ஆய்வுக்குப் பிறகே அனுமதி’… மத்திய அரசு திட்டவட்டம்..!!!

அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு பிறகே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு ‘சைகோவ்-டி என்ற பெயரில் ஊசி இன்றி செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி அவசர காலத்திற்கு மட்டும் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியும் சிறுவர்களுக்கு செலுத்த மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினரும் தடுப்பூசி பிரிவின் தலைவருமான வி கே பால் தெரிவித்துள்ளதாவது: கோவேக்சின் தடுப்பூசி ஏற்கனவே பெரியவர்களுக்கும் போடப்பட்டு வருகிறது, சிறுவர்களுக்கு  போட வேண்டுமென்றால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும். அதே சமயம் சிறுவர்களுக்கு தற்போது தொற்று அறிகுறி தென்படுவதில்லை.

ஆனால் அவர்களிடமிருந்து பிறருக்கு நோய் தொற்று எளிதாக பரவுகிறது. முதலில் போதிய அளவு தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்ட பிறகு சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை குழு ஆய்வு செய்து வருகிறது. இதுதொடர்பாக அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்குப் பிறகே சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |