தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதையடுத்து இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்து சேவையாற்றும் தன் ஆர்வலர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை நடத்த தன்னார்வலர்கள் 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதில் விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் https://illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.