Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சகிப்புத்தன்மை வேண்டும்… “ஒருவர் செய்த தவறு தேசிய பிரச்னையாக மாறி விட்டது”… சொமோட்டோ நிறுவனர் ட்விட்!!

இந்தியாவை நேசிப்பது போல் தமிழ்நாட்டையும் நேசிப்பதாக சொமோட்டோ நிறுவன தலைவர் தீபிந்தர் கோயல் ட்வீட் செய்துள்ளார்..

தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் ஆர்டர் செய்த உணவு  முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி பணத்தை திரும்பக் கேட்டபோது, அந்த நிறுவனம் மொழி பிரச்சனையால் இப்படி நடந்ததாக கூறியுள்ளார்.. தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை வேலைக்கு வைத்திருக்காக வேண்டும் என்று விகாஷ் கூற, இந்தியாவின் தேசிய மொழி இந்தி, அதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.. இந்தி மொழி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என சோமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது..

இதையடுத்து அந்த உரையாடலை ஸ்கிரீன் சாட் எடுத்து விகாஷ் இணையத்தில் பதிவிட அந்தச் செய்திகள் வைரலாகி வருகிறது..  #Reject_zomato ஹேஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பரப்பப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது..

திமுக எம்பி கனிமொழி உட்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த  நிலையில், சொமேட்டோநிறுவனம் ட்விட்டரில், வணக்கம் விகாஷ், எங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு முகவரின் நடத்தைக்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். இந்த சம்பவம் குறித்த எங்கள் அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ. அடுத்த முறை உங்களுக்கு சிறப்பாக சேவை செய்ய நீங்கள் எங்களுக்கு வாய்ப்பு தருவீர்கள் என்று நம்புகிறோம்  தயவு செய்து சொமேட்டோவை நிராகரிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது..

சொமேட்டோ வெளியிட்ட அறிக்கையில், வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம். பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம் மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிர கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.

இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத் தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டை குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்தல் முயற்சிகளை உள்ளூர் மயமாக்கியுள்ளோம். (எடுத்துக்காட்டு. நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்), மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்டர் / சர்வீஸ் சென்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.

உணவு மற்றும் வழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்து உள்ளோம் அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தது..

இந்த நிலையில் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் “ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் மையத்திலிருந்து யாரோ ஒருவர் (ஊழியர்) அறியாமல் செய்த தவறு ஒரு தேசிய பிரச்சினையாக மாறிவிட்டது. நம் நாட்டில் சகிப்புத்தன்மை இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.

இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணிநீக்கம் செய்வது ஏற்கவேண்டிய ஒன்றல்ல. நாங்கள் முகவரை மீண்டும் பணிக்கு அமர்த்துவோம்.. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்..

நினைவில் கொள்ளுங்கள், எங்கள் அழைப்பு மைய முகவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள். அவர்கள் பிராந்திய மக்களின் உணர்வுகளையும் மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளும் அளவிற்கு யாரும் நிபுணர்கள் அல்ல.. நானும் தான்..

நாம் அனைவரும் மற்றவர்களின் குறைபாடுகளை பொறுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒருவருக்கொருவர் மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழ்நாடு  நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாட்டை நேசிப்பது போல உங்களையும் நேசிக்கிறோம். அதிகமாக இல்லை, குறைவாக இல்லை. நாம் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்..

Categories

Tech |