அமெரிக்க அரசு சிறப்பு குழு ஒன்றை ஹைதியில் கடத்தப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ ஊழியர்கள் 17 பேரை பாதுகாப்பாக மீட்பதற்காக ஹைதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் சிலர் ஹைதி நாட்டின் தலைநகரான போர்ட்டோ பிரின்சில் உள்ள தேவாலயத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அந்த கிறிஸ்தவ ஊழியர்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தங்கள் குடும்பத்தினரோடு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த வாகனத்தை மர்ம கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தி வாகனத்தில் இருந்த சிறுவர்கள் உட்பட 17 பேரை கடத்தி சென்றுள்ளது. அந்த 17 பேரில் ஒருவர் கனடாவில் சேர்ந்தவர் என்றும், 16 பேர் அமெரிக்கர்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஹைதி காவல்துறையினர் இந்த கடத்தல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அரசு மர்ம கும்பலால் கடத்தப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளது. அந்த வகையில் அமெரிக்க சிறப்பு குழு ஒன்று ஹைதி அரசுக்கு உதவும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே “அமெரிக்க வெளியுறவுத் துறையின் முக்கிய பணிகளில் ஒன்று வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது” என்று அமெரிக்க அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.