நிலக்கரி பற்றாக்குறை, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் காரணமாக சீனாவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் நிலக்கரி பற்றாக்குறை, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்க ஆரம்பித்துள்ளது. சீனாவில் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக இருந்துள்ளது. அதுவே முதலாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18.3 சதவீதமாக இருந்துள்ளது. இதனால் முந்தைய காலாண்டை விட மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றாம் காலாண்டில் 5 சதவீதம் உயரும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளது. இந்நிலையில் “உள்நாட்டு பொருளாதார மீட்பு சீராகவும் நிலையற்றதாகவும் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் பூ லிங்ஹுய் கூறியுள்ளார்.
இதற்கிடையே நிபுணர்கள் சிலர் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நான்காவது காலாண்டில் கூடுதலான அழுத்தத்தை தான் எதிர்கொள்ளும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் ரியல் எஸ்டேட் துறையின் பங்கு சீன பொருளாதார வளர்ச்சியில் முக்கிய ஒன்றாக திகழ்கிறது. அதாவது ரியல் எஸ்டேட் துறை சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29 சதவீதம் அளவில் பங்கு வகிக்கிறது. இந்நிலையில் சீன நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட் திவாலானதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. இதனால் பொருளாதார நிபுணர்கள் சீனாவின் பொருளாதாரத்தில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளனர்.