தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது பற்றி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர்ந்து வருகின்ற நிலையில், திமுக அரசும், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வேல்ராஜ்யும், பொறியியல் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் பொறியியல் படிப்பை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்து முடித்து வெளியில் வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு பெற்று தருவது சிக்கலாக இருக்கிறது.
எனவே அவர்களை செயல்திறன் மிக்க மாணவர்களாகவும், தொழில்நுட்பம் அறிந்தவர்களாகவும், மாற்றுவது அரசின் கடமை. எனவே நவீன அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வகையிலும், மாணவர்களை உருவாக்குவதற்கு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் 263வது சிண்டிகேட் குழு கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் பேசுகையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள பல்வேறு அரசாணைகளை அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுத்துவதற்கு சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி கிடைத்துள்ளது.
குறிப்பாக பாடத்திட்டம் மாற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்ட நிலையில், கல்வியியல் குழுவின் அனுமதியுடன் பாடத்திட்டம் தயார் செய்யப்படும் இதையடுத்து முறைப்படி அனுமதி வழங்கவும், திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே இந்த ஆண்டு முதலே பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
பொறியியல் 1- ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன மற்ற ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். இதன் மூலமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மாணவர்கள் திறன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.