தமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு 2020- 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை வழங்குவதற்காக 419 ரூபாய் கோடி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை,எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முறை அமலில் உள்ளது. மேலும் இட ஒதுக்கீட்டு முறையானது தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து தமிழகத்தில் இந்த இட ஒதுக்கீடு முறையில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளிக்கல்வித் துறை தனியார் பள்ளிகளுக்கு வழங்கி வருகின்ற நிலையில் 2020 -2021 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் பயின்று வரும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 419 கோடியே 54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிதியானது தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பிரித்து வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பிற்கு பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் கே ஆர் நந்தகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.