சிரியாவில் நாடாளுமன்றம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் சாலை ஓரத்தில் மறைத்து வைத்திருந்த 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் இராணுவ பேருந்து ஒன்று சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் படுகாயங்களுடன் தப்பியதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த சம்பவம் இன்று காலை பரபரப்பான போக்குவரத்து மிகுந்த பாலம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. அதிலும் 2 வெடிகுண்டுகளும் பாலத்தின் அடியிலேயே பொருத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த வெடிவிபத்தில் சிக்கிய இராணுவ பேருந்தானது முழுமையாக சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் மூன்றாவது வெடிகுண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வெடிகுண்டு உரிய நிபுணர்கள் மூலம் செயலிழக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து இதுவரை எந்த குழுவினரும் பொறுப்பு ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது டமாஸ்கஸ் நகரின் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக தாக்குதல் நிகழ்ந்த பாலமானது, அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தின் மிக அருகில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த பாலத்தின் அருகே அரசாங்க அலுவலகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மன்ற அதிகாரிகள் பலர் தங்கும் பிரபலமான விடுதி ஒன்றும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.