பசு மாடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைப்புலி ஒன்று அடிக்கடி புகுந்து அங்கு வளர்த்துவரும் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்டவைகளை கடித்துக் கொன்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தைப்புலி தேயிலை செடிகளுக்கு அருகில் இருந்து அங்கு வருபவர்களை தாக்க முயல்கிறது. இதனால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இந்த இடத்தில் அதே பகுதியில் வசிக்கும் முத்துலிங்கம் என்பவர் என்பவர் தனக்கு சொந்தமாக 2 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அதை அங்குள்ள தேயிலை தோட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு பசுமாடு திரும்பவில்லை.
இதனையடுத்து முத்துலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் பசுமாடுகளை தேடி அங்குள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்கு 2 பசு மாடுகளும் இறந்து கிடந்தன. அவற்றை சிறுத்தை புலி கடித்து கொன்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு பார்வையிட்டனர். அப்போது முத்துலிங்கம் இறந்த பசு மாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், ஊருக்குள் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைபுலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் சிறுத்தைபுலி அட்டகாசத்தால் அப்பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.