தமிழகத்தில் கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலையத்துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பதில் அளிக்க ஆணையிட்டுள்ளது. கோவில் அர்ச்சகர்கள் நியமனம் பற்றிய இந்து சமய அறநிலையத் துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பணி புதிய விதிகள் 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.அதில் 3 ஆண்டு பயிற்சி முடித்தவர்களும், 18 வயதிலிருந்து 35 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளது. இதை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் மூலமாக அதன் பொதுச்செயலாளர் முத்துக்குமார் மற்றும் சிஐடி நகரை சேர்ந்த ஸ்ரீதரன் வழக்கு தொடுத்திருந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் 8 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் டி.ஆர் ரமேஷ் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பரம்பரை அறங்காவலர்கள் அமைக்கப்படாத நிலையில் அரசே அர்ச்சகர்களை தேர்ந்தெடுப்பது சட்டவிரோதமான செயல் என்றும், பரம்பரை அறங்காவலர்கள் தான் அர்ச்சகர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 28 ஆகம விதிகளுக்கு உட்பட்டு பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும், ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்களை தேர்ந்தெடுப்பதை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இப்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், ஆனால் அர்ச்சகரை பணி நியமனங்கள் உயர் நீதி மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டு உள்ளது என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு குறித்து தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.