வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 450 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை தோறும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு திருப்பூர், தேனி, சேலம், கொங்கணாபுரம், திண்டுக்கல், அவினாசி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தாங்கள் விளைவித்த 450 பருத்தி மூட்டையை ஏலத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அதன்படி சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 7,798 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 8,911 ரூபாய்க்கும், ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 7,411 ரூபாயில் இருந்து 8,640 ரூபாய் வரை ஏலம் போனது. மேலும் கொட்டு ரக பருத்தி குறைந்தபட்சமாக 3,799 ரூபாயில் இருந்து 4,805 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட நிலையில் மொத்தமாக 10 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.