அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டானது கடந்த 17.10.21 அன்று நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா திநகர் ஆர்காடு தெருவில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திலுள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றியதோடு இல்லாமல் கழக பொதுச்செயலாளர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதனை கண்டித்து அதிமுக கட்சியின் கழக அமைப்பு செயலாளர் திரு ஜெயக்குமார், கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு பாபு முருகவேல் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாபு முருகவேல், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாம்பலம் காவல் நிலையத்தில் சசிகலாவின் மீது புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலா நடராஜன் சட்டப்படி நீக்கப்பட்டுள்ளார். எனவே இவருக்கும், அதிமுகவிற்கும், இரட்டை இலை சின்னத்திற்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில் திமுகவுடன் இணைந்து சசிகலா கைகோர்த்து அதிமுகவை வீழ்த்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அனுமதியின்றி அவரது காரில் அதிமுகவின் கொடியை ஏற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிமுக கட்சியை ஏதோ சசிகலா தான் உருவாக்கினார் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி கொண்டு வருகிறார். எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அனுமதியின்றி கொடியேற்றி உள்ள இவரின் மாபெரும் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே இவரின் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.