தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான டிஆர்பி தேர்வில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் 9- 12 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும், கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த கோரிக்கையை ஏற்று தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் பொதுப்பிரிவினருக்கு 40 வயதிலிருந்து 45 வயதாகவும், மற்ற இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45 வயதிலிருந்து 50 வயதாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் வயதுவரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதால் 2 லட்சம் பி.எட் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இப்போது வயதுவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்ப காலஅவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.