கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை சுமார் 11 வருடம் கழித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலத்தில் வசித்து வரும் பட்டு-சிவமலை தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சிவமலை தனது மகனான ஏழுமலையின் குடும்ப விவகாரத்தை தீர்த்து வைப்பதற்காக மூரார்பாளையத்திற்கு சென்ற போது அங்கு அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சங்கராபுரம் காவல்துறையினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் 4 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் சின்னத்துரை என்பவர் மட்டும் தலைமறைவாகியுள்ளார்.
மேலும் காவல்துறையினர் சின்னத்துரையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் 11 வருடம் கழித்து சின்னத்துரை மூரார்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்று சின்னதுரையை கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். மேலும் மாஜிஸ்திரேட்டு உத்தரவின்படி காவல்துறையினர் சின்னத்துரையை சிறையில் அடைத்துள்ளனர்.