ரசிகர்களுக்கு பிறந்தநாள் ஸ்பெஷலாக தனது ‘ஹேராம்’ படத்தின் ட்ரெய்லரை ரீ-கட் செய்து வெளியிட்டுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.குழந்தை நட்சத்திரம், டான்ஸ் மாஸ்டர், கதாநாயகன், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட சினிமாவில் உள்ள இதர கலைகளையும் அறிந்தவராக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன், தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
திரை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் கமல்ஹாசனுக்கு பல்வேறு வித்தியாசமான முறைகளில் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக தனது மாஸ்டர் பீஸ் படைப்பான ‘ஹேராம்’ படத்தின் ட்ரெய்லரை ரீ-கட் செய்து வெளியிட்டுள்ளார் கமல்.
இந்தப் படம் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார் கமல்ஹாசன். இதற்கு முன்னர் பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்திய சுதந்திரத்துக்கு முன்பு இருந்த காந்திய எதிர்ப்பு, இந்துத்துவ செயல்பாடு, இந்து – முஸ்லீம் பிரிவினை போன்றவற்றை உண்மை வரலாற்று நிகழ்வுகளோடு கற்பனை கலந்த அழகான திரைக்காவியமாக ‘ஹேராம்’ படத்தை தந்திருப்பார். இப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஏதாவது புதிய விஷயத்தை நம் கண்முன்னே காட்டும் விதமாக உருவாக்கியிருக்கிறார் கமல்ஹாசன்.
ஆல்டைம் சிறந்த தமிழ் சினிமாக்களில் தனக்கென தனி இடத்தை வைத்துள்ள ‘ஹேராம்’ படத்தின் ரீ-கட் ட்ரெய்லரில், மகாத்மா காந்தி படுகொலை தொடங்கி சாகித்ராம் ஐயங்காராகத் தோன்றிய கமல்ஹாசனின் பயணத்தை, இசைஞானி இளையராஜாவின் மென்மையான பின்னணி இசையுடன் வெளியிட்டு, மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்க்கத் தூண்டியுள்ளார் கமல்.